திங்கள், 7 நவம்பர், 2016

சிவம்

பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை
ஆண்டு கொண்டு புரியாமல் இருப்பான் ஒருவன்..


அவனைப் புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்...


தென்னை இளநீருக்குள்ளே தேக்கி வைத்த ஓட்டுக்குள்ளே தேங்காயைப் போலிருப்பான் ஒருவன்.
அவன் தான் இறைவன் என்றான்.. கவியரசன்...


மனிதர்களாகிய நம் உடலினுள் உயிர் இருந்தால் தான் நாம் சிவம்! இல்லையேல் நாம் சவம்!


உயிர் உடலுடன் இருக்கும்போது ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுகிறான் மனிதன். இப்படி “தலை கால்” தெரியாமல் ஆடுபவனெல்லாம் அடிமுட்டாள்களே !


ஒருவன் எப்படி பிறக்கிறான்? பிறப்பு என்றால் என்ன? ஏன் பிறக்கிறான்? ஆணும் பெண்ணும் சேர்ந்தால் குழந்தை பிறந்து விடுமா? நடக்காது!?


இன்றைக்கும் குழந்தையில்லாத தம்பதிகள் எத்தனையோ பேர் இருக்கின்றார்களே..


பிறந்தவர்கள் எங்கிருந்து பிறந்தார்கள்? இறந்தவர்கள் எங்கு போனார்கள்? பிறந்தபோது வந்த உடல், இறந்தபோதும் இருக்கின்றதே?


அப்டியானால் பிறப்பு இறப்பு உடலுக்கு இல்லையே?! பின் எதற்கு? உயிர்கொண்டு உடல் வந்தாலே பிரயோஜனம்! உயிர் இன்றி உடல் இருந்தால் மண்தான்!.


உயிர்தான் பிரதானம்! உயிர்தான் பிறக்கிறது உடல் கொண்டு! உடலைவிட்டு உயிர் பிரிவதே மரணம்! பிறப்பும், இறப்பும் உயிர் வருவதும் போவதும் தான்!


தாயின் கருவிலே உருவாகிறது பிண்டம், மூன்று மாதத்திற்கு பிறகு கருவுக்கு உயிர் எப்படி வந்தது?


“உயிர்” என்றால் என்ன? உயிர் எங்கிருந்தது? எப்படி உடலினுள் பிரவேசித்தது? உடலில் எங்கு இருக்கிறது? எந்த வடிவில் தன்மையில் இருக்கின்றது? இதையெல்லாம் அறிந்தவனே ஞானி!!


அவனே சித்தன்!!


இங்கேதான் ஆரம்பிக்கிறது நமது மெய்ஞ்ஞானம்! தாயின் வயிற்றிலே குழந்தையின் உடல்தான் உருவாகிறது! உயிர் வந்து சேர்க்கிறது!


அணுவுக்கு அணுவாக ஒளிர்பவன் மனித உடலினுள் பலகோடி அணுத்துகள்கள் உள்ளத்தில் இல்லாமல் போவானா?! எங்கும் இருக்கும் இறைவன், தூணிலும் துரும்பிலும் இருக்கும் இறைவன் நம் உடலினுள்ளும் இருக்கிறான் “உயிராக”!!


இதுவே ஆதிகாலம் தொட்டு நமது ஞானிகள் எல்லோரும் உரைத்த உண்மை! வேதங்களில் சொல்லப்பட்ட இறை இரகசியம்!


“ உயிரே கடவுள், அகம் பிரம்மாஸ்மி”.
உயிராக பிராணனாக நம்முள் இருக்கிறார்! நம் உள் மனம் கடந்த நிலையில் இருப்பதால் தான், உள்கடந்து இருப்பதால் தான் ஆன்றோர் கடவுள் என்றனர்!


கட உள்ளே கடத்தினுள்ளே, உன் உடலினுள்ளே என்றுதான் இதற்கு பொருள்! கடவுளே என்று உலகத்திலே தேடுபவன் காண்பது அரிது! கடவுளே என்று உடலிலே தேடுபவன் காண்பான் கண்களினாலேயே! வெளியிலே தேடுவது பக்தி! உடலுள்ளே தேடுவது ஞானம்!


“உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்
தெள்ளத் தெளிந்தார்க்கு ஜீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே”
திருமந்திரம் கூறும் சத்தியம்


இதுவே! தமிழ் மறையான இதுவே நாம் அறிந்து கொள்ள வேண்டிய மிகப்பெரிய உண்மை ஞானம்! இறை இரகசியம்!


நம் உடலாகிய கோயிலில் உயிராக தானே வீற்றிருக்கிறான் எல்லாம் வல்ல இறைவன்!


இன்றுவரை இந்த உலகில் தோன்றிய மதங்களும், மார்க்கங்களும், மகான்கள் அனைவரும் சொன்னதும் ஒப்புக்கொண்டதும் இந்த உண்மை ஒன்றையே! இறைவன் ஒருவரே நம் உடலில் உயிராக இருப்பதும் அவரே! அவனின்றி ஓர் அணுவும் அசையாது! இதை மறுப்பவர் யாருமில்லை! எம்மதமும் இந்த உண்மைகளை மறுத்ததில்லை! உலகர் அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரே உண்மை இது ஒன்றே!!


எல்லாம் வல்ல இறைவன் நம் உடலில் உயிராக இருக்கின்றான் என்பதும் தான் மனிதனாக பிறந்த நாம் அரிய வேண்டிய மாபெரும் இரகசியம்!


உயிரே கடவுள்..அஹம் பிரம்மாஸ்மி
அருட்பெரும் உயிரே தனி பெரும் கருணை...





முன் செய்த வல்வினையால்.....
முந்தி வந்த விந்துத்துளி......


அடைத்து வைத்த தோல் பைக்குள்
அடங்கிப்போய் சூல் கொள்ள...


வெள்ளை இரத்தம் சிவப்பாகி
நாடி, நரம்பு சதை பிடித்து...


அவனவளாய் இனம் பிரித்து
பிண்டம் என உருவெடுத்து.....


ஐயிரண்டு மாதத்தில் அன்னையவள் உந்தி தள்ள.....


நச்சுப்பையுடன் ஒட்டி பிறந்து
அண்டமதில் அலைந்து திரிந்து...


அங்கும், இங்கும் கூத்தாடி
பொய்யை மெய்யாய் தினம் நாடி..


அகமதன் அர்த்தநிலை????
ஐய்யோ..............


ஒன்றும் புரியவில்லை.......!!!


சொந்த பந்த காட்டுக்குள்ளே
இன்பத் துன்பக் கூடு கட்டி......


இன்னொரு சதை பிண்டம் தேடி...


சேர்த்து வைத்த விந்தை கொட்டி ....


மீண்டும், மீண்டும்
பிறப்பெடுத்து பிறப்பெடுத்து......


பிறவியதன் கட்டறுக்க
இருக்கும் வழி காணாது.....


அப்பப்பா போதுமப்பா
கண்டுகொள்வோம்   மூலமதை.......!!!


உயிர்கொடுத்து உருட்டியவன்
உலகமதை திரட்டியவன்......!!!


பிறப்பு எனும் வட்டத்துக்கு செக்குமாடாய் நம்மை சுழற்றியவன்.......!!!


அவனை இனம் காண தேடி
நித்தம் தேடி ஓடி, ஓடி.......!!!


வெளியெங்கும் காணாது
வேறு வழி தெரியாது.......!!!


சுழல்கின்ற பூமியின் மேல்
சுற்றி, சுற்றி பிறந்து வந்து.....!!!


சூட்சுமத்தை உணராது
சுடுகாட்டில் பிணமாகி......!!!


மற்றுமொரு தோல்பைக்குள்
மாற்றமில்லா விந்தாகி......!!!


உள்ளுக்குள் உள் நுழைந்து....
உற்றவனை கண்டுகொண்டு.....!!!


அவனே நானாகி.....


நானே அனைத்துமாகி......!!!!


ஆதி அந்தம் தெளிந்து
உண்மையதை உணர்ந்து......!!!


அம்மாம்மா இறுதியில்
அண்டசராசரம் எங்கும்.....!!!


எல்லையற்று கலந்திருக்கும்
அது .......


என ஆனதப்பா முடிவினிலே
இது ............!!!


ஓம் நமசிவாய...........


"உணர்ச்சிகளே நம்முள் சலனத்தை ஏற்படுத்துகிறது.....


சலனமே மனதில் எண்ணங்களை
ஏற்படுத்துகிறது....


எண்ணங்களே கர்மவினையை உருவாக்குகின்றன......


எண்ணமில்லையேல் வினையில்லை.....!
வினையில்லையேல் விதியில்லை".......!

                பகிர்வில் ர.சடகோபால்.BA    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சனிக்கு எள் தீபம் ஏற்றாதீர்

எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள். இதுவும் தவறாகச் செய்யப்படும் ஒரு வழிபாடு. இது தோஷத்தைப் போக்குவதற்குப் பதிலாக அதிகப்படு...